முக்கியச் செய்திகள் தமிழகம்

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் ; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதற்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து விசாரித்து, ஆலோசனை மேற்கொள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் 5 பேர் கொண்ட குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளார்.இந்த குழு இன்று மாலை சென்னை வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், வடமாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ”வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்  : ’ஹோலி கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம்’ – தாம்பரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் பேட்டி

இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்னையை வைத்து, இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல்துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதோடு, தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததைப் போல பரப்பியதே இதன் தொடக்கமாக அமைந்துள்ளது. எனவே, ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்ந்தும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பீகார் மாநில முதலமைச்சர், எனது பெருமதிப்பிற்குரிய சகோதரர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக நான் பேசி இருக்கிறேன். அனைத்துத் தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதையும் அவருக்கு உறுதியாகச் சொல்லி இருக்கிறேன். வளமான அமைதியான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விநாயகர் சதுர்த்தி: அரசின் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி

G SaravanaKumar

வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையைக் கொலை செய்த குடும்பத்தினர்

EZHILARASAN D

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

G SaravanaKumar