சென்னை பெரம்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு நகைக் கடையில், கடந்த மாதம் 10 ஆம் தேதி 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. கொள்ளையர்கள் கடையில் ஷட்டர் மற்றும் நகை பெட்டகத்தை வெல்டிங் மிஷின் மூலம் வெட்டி எடுத்து தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், சிசிடிவி கேமராவில் உள்ள ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை பெரம்பூர் செம்பியம் காவல் நிலையத்தில் வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த பிப்ரவரி 9ம் தேதி பெரம்பூர் நகைக்கடையில் 8 கிலோவுக்கு மேல் நகை காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கபப்ட்டது.
தனிப்படை பல கோணங்களில் விசாரணை செய்தது. விசாரணையில் பெங்களூரை சேர்ந்த 6 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. முக்கிய குற்றவாளியை பெங்களூர் காவல்துறை கைது செய்துள்ளனர். அவர்களை அழைத்து வந்து சரண்டர் செய்துள்ளோம். காவல் விசாரணைக்கு எடுத்து விசாரிக்க உள்ளோம். ஏற்கனவே அவர்கள் கடையை உடைத்து நகை திருடியது தொடர்பான வழக்குகள் உண்டு.
திருடுவதற்கு முன்பாக 2 நாட்களுக்கு முன்பே நோட்டமிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
கங்காதரனை பெங்களூர் காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் தான் கைது செய்துள்ளனர். கைதான இருவரிடம் எவ்வித நகைகளும் பறிமுதல் செய்யப்படவில்லை.
இந்த திருட்டிற்கு கங்காதாரன் தான் மூளையாக செயல்பட்டவர். அவருக்கு வெல்டிங் வேலை தெரியும்.
குற்றவாளிகளை காவல் விசாரணைக்கு எடுக்கும் போது முழு விவரங்களும் தெரியவரும்.
கோவை பதிவு எண் கொண்ட வண்டியை கொள்ளையர்கள் பயன்படுத்தியுள்ளனர். பல பேரை இந்த சம்பவத்தில் விசாரித்துள்ளோம். கொள்ளையர்கள் 6 பேரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று காவல் ஆணையர் அன்பு தெரிவித்தார்.