முக்கியச் செய்திகள் இந்தியா

“தடுப்பூசியால் கருவுறும் தன்மை பாதிக்காது” – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்படும் எந்த தடுப்பூசியும் ஆண்மையையும், பெண்களின் கருவுறும் தன்மையையும் பாதிக்காது என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தது முதல் பல்வேறு சர்ச்சைகளும், தவறான தகவல்களும், வதந்திகளும் சமூகவலைதளத்தில் பரவிவருகின்றன. குறிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும், ஆண்கள் ஆண்மை தன்மை இழந்துவிடுவர், பெண்கள் கருத்தறிக்கும் தன்மையை இழந்துவிடுவர், தடுப்பூசி செலுத்திக்கொள்கிறவர்கள் 2 ஆண்டுகளுக்குள் உயிரிழந்து விடுவர் போன்ற பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி குறித்து விளக்கமளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஆண் தன்மை இழப்பார்கள் என்றோ, பெண்கள் கருவுறும் தன்மையை இழப்பார்கள் என்றோ அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்பு, அறிவியல்பூர்வமான சோதனைகள் செய்யப்பட்டு, விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு, குறிப்பிட்ட சில மனிதர்களுக்கு சோதனைக்காக செலுத்தப்பட்டு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என தெரிந்த பிறகே மக்களுக்கு செலுத்த அனுமதியளிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்களும், புதிதாக திருமணம் முடித்தவர்களும் அச்சம்கொள்ளாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நோய் எதிர்ப்புசக்தியின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே. அரோரா கூறும்போது, போலியோ தடுப்பூசி அறிமுகம் செய்யும்போதும், வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் இதைபோன்று வதந்திகள் பரப்பப்பட்டன என தெரிவித்தார். குறிப்பாக போலியோ தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ஆண்மை தன்மையை இழக்க நேரிடும், பெண்கள் கருவுறும் தன்மையை இழப்பார்கள் என்றே வதந்தி பரவியதாக அவர் தெரிவித்தார். ஆனால் இன்று தடுப்பூசியின் மூலம் இந்தியா போலியோவை முழுமையாக ஒழித்த நாடாக மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

தடுப்பூசிகளை கையாளும் குழுவின் தேசிய நிபுணர் குழு கூறும்போது, குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்தனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன்னும் செலுத்திய பின்னரும், குழந்தைகளுக்கு பாலூட்டுவதை நிறுத்த தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 5,415 பேருக்கு கொரோனா தொற்று!

Gayathri Venkatesan

அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி தமிழகத்தை தலை நிமிர்த்தும் – பொன்.ராதாகிருஷ்ணன்

Gayathri Venkatesan

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து புபேந்தர் சிங் மான் விலகல்!

Saravana