தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்வோம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத்தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இதனால், கொரோனாவால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொட்ர்ந்து குறைந்து வருகிறது. தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து காசநோயை முற்றிலும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். தமிழ்நாட்டில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருந்தும் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை எனக் கூறிய அவர், அதற்காக மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டாம் என்றும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்வோம் எனவும் தெரிவித்தார்.







