’இந்தியன் 2’ பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்த படம், ‘இந்தியன் 2’. படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, கொரோனா ஊரடங்கு காரணமாக, பல மாதங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் நீதிபதி சதிஷ்குமார் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அதில், இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து, நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிபதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.







