இயற்பியலுக்கான நோபல் பரிசு எலக்ட்ரான் தொடர்பான ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று (அக்.,2) முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார். 2023ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ‘கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக பயனுள்ள எம்.ஆர்.என்ஏ (mRNA) தடுப்பூசிகளை உருவாக்கியதற்காக’ இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு; எலக்ட்ரான் தொடர்பான ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த பியரி அகோஸ்டினி, ஜெர்மனியை சேர்ந்த ஃபெரென்க் க்ராஸ்ஸ் மற்றும் ஸ்வீடனை சேர்ந்த அன்னே எல்’ஹுல்லியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு “பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக” அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2023 #NobelPrize in Physics to Pierre Agostini, Ferenc Krausz and Anne L’Huillier “for experimental methods that generate attosecond pulses of light for the study of electron dynamics in matter.” pic.twitter.com/6sPjl1FFzv— The Nobel Prize (@NobelPrize) October 3, 2023







