உடல்நலக்குறைவால் சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் போண்டா மணி, திரைத்துறையில் இருந்து யாரும் தன்னை பார்க்கவரவில்லை என வேதனை தெரிவித்தார்.
திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் வறுமையால் வாடும் தங்களுக்கு உதவி தேவை என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், போண்டா மணி நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், சினிமா துறையில் இருப்பவர்கள் தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பார்க்க வரவில்லை என்றும், தனியார் மருத்துவமனை என்றால் வந்திருப்பார்கள் என வருத்தத்துடன் தெரிவித்தார்.கடந்த 20 நாட்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் வந்ததால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறேன் என கூறினார்.
மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் தனக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாக தெரிவித்ததாக கூறினார். இதனால் மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
அனைவரையும் சிரிக்க வைத்த தனக்கு இந்த நிலைமை என வேதனை தெரிவித்த அவர், தனக்கென்று ஒன்றும் சேர்த்து வைக்கவில்லை என்றார். தனக்கு உதவி தேவை என்றும் கேட்டுக்கொண்டார். சினிமா துறையில் வடிவேலுடன் நடித்த சில நகைச்சுவை நடிகர்கள் தன்னை பார்க்க வந்ததாகவும் மற்றவர்கள் பார்க்க வரவில்லை என்று போண்டா மணி தெரிவித்தார்.