தவெக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நினைத்ததாகவும் ஆனால் திமுக அவருக்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வர விடாமல் செய்ததகாவும் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜுனாவின் கருத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
நடிகர் ரஜினிகாந்தை மிரட்டி அரசியலுக்கு வர விடாமல் செய்த திமுக – ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு..!
இந்த நிலையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , “நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது. யாருடைய மிரட்டலுக்கும் அவர் அடிபணியமாட்டார். ரஜினிகாந்தை திமுக, மிரட்டியதாக கூறுவது அப்பட்டமான பொய். அவர் எங்களது நண்பர். 1996ல் திமுக ஆட்சி வர வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த். அரசியல் ஆதாயத்திற்காக தவெகவினர் இவ்வாறு கூறுகின்றனர்.
கரூர் விவகாரத்தில், செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அவர் எந்த தவறையும் செய்யவில்லை. அவருக்கு சிபிஐ சம்மன் கொடுத்திருப்பது திமுகவை மிரட்டி பார்க்கும் செயல். செந்தில் பாலாஜி தைரியமானவர். இதனை அவர் சட்டப்படி எதிர்கொள்வார்” என்றார்.







