தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ஆஜரான ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என்று ஓ. பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக இன்று ஓ. பன்னீர் செல்வம் ஆஜரானார். முன்னதாக நேற்று முதன்முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ஆஜரான ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த வாக்கு மூலத்தில், 2011-12 ஆண்டு மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாகவோ அல்லது அது தொடர்பாக எவ்வித தகவலையும் காவல்துறை திரட்டவில்லை என ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரிதான் என பதிலளித்தார்.
தொடர்ந்து, ஜெயலலிதாவை குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஜெயலலிதா தன்னை அழைத்து சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டி முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், தேர்ந்தெடுக்கப்படுபடுபவர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளிக்க வேண்டும் என கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, என்னிடம் தெரிவித்த கருத்தை மீண்டும் அவரிடம் தெரிவித்ததாகவும், ஓ.பன்னீர்செல்வம்தான் முதலமைச்சர் எனவும் அவர் பெயரை நீங்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்ட வேண்டும் எனவும் ஜெயலலிதா கூறினார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அப்போது தான் மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்ததாகவும், அதற்கு அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும் எனவும், சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய் எனவும் ஜெயலலிதா கூறியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.