ஊராட்சி தொடக்கப்பள்ளி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய கள்ளிவயல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொட்டையன்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது 28 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட
இந்த பள்ளிக்கூடத்தில் கூரை முற்றிலும் சேதமடைந்து சுவரின் பூச்சு அடிக்கடி விழுந்து வந்தது. மேலும் பக்கவாட்டு சுவர்கள் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகள் வரை இப்பள்ளியில் ஏழு மாணவர்கள் மட்டுமே இருந்தனர். தலைமை ஆசிரியரின் முயற்சியால் தற்போது 28 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஆனால் தற்போது சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயில பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளுனர். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தற்போது தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து மாணவர்களின் நலனை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.







