உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. எனினும், காட்டிமா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தோல்வி அடைந்தார். இந்நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான கூட்டம் தலைநகர் டராடூனில் நேற்று நடைபெற்றது.
இதில், முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமியை, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து, முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நாளை மாலை 3.30 மணிக்கு பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரோடு, கேபினெட் அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் வரும் 28ம் தேதி பதவி ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. கோவாவில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, மகாராஷ்ட்ரவாதி கோமந்தக் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைக்க இருக்கிறது.
பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக பிரமோத் சாவந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அவர் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, வரும் 28ம் தேதி பிரமோத் சாவந்த் கோவா முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.








