என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
என்எல்சி இரண்டாவது சுரங்கம் விரிவாக்க பணிகளுக்காக நில எடுப்பு பணியில் என்எல்சி மற்றும் மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக உள்ள நிலையில் இதுகுறித்து பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முருகன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தனியார் ஹோட்டலில் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் பேசிய வேல்முருகன், என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் அளித்தவர்களுக்கு உரிய இழப்பீட்டை என்எல்சி நிர்வாகம் வழங்கியதில்லை. மேலும் என்எல்சி நிர்வாகம் அடாவடித்தனமாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுகிறது எனவும் பேசினார் .
தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும், வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு வாழ்நாள் நிவாரணமாக கொடுக்கப்பட்ட தொகையை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். இதனையடுத்து கொடுக்கப்படும் நிலத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மாற்றுமனையாக 1 சென்ட் நிலம், வேலைவாய்ப்பு ,இழப்பீடு உள்ளிட்டவற்றிற்கு தமிழக அரசு தனி ஆணை வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடையே பேசிய வேல்முருகன் ,என்எல்சி நிர்வாகம்,நிலம் வழங்கியவர்களுக்கு, வழங்க இருப்பவர்களுக்கும் வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்த வேலை வழங்கப்பட வேண்டும். என்எல்சி சார்ந்த குழு என்று வைத்து மக்களை மிரட்டல் செயலில் ஈடுபடக்கூடாது எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து என்எல்சி நிர்வாகத்திற்கு விவசாயிகள்,நிலம் வழங்கியோர் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என வலியறுத்தி டிசம்பர் 26 ம் தேதி மாலை 3 மணிக்கு மாபெரும் போராட்டம் மற்றும் பேரணி என்எல்சி வளாகத்தில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
இந்த பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல். திருமாவளவன், மதிமுக நிறுவனர் வைகோ , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்கஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனக் கூறினார். மேலும் இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதோடு ஜனவரியில் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, என்எல்சியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனப் பேசினார்.










