இந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில், அடுத்த ஆண்டு ஒரு சொட்டு நீர்கூட தேங்காத வகையில் பணிகள் செய்யப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை புறநகர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். 2006 – 2011ம் ஆண்டுகால திமுக ஆட்சியில் போரூர் ஏரியில் இருந்து காலவாய் அமைத்து நீரை வெளியேற்ற திட்டம் போடப்பட்டு செயல்படுத்தினோம்.
2016 -2021ம் ஆட்சிக்காலத்தில் நான்கு ஆண்டுகள் இந்த திட்டத்தை செயல்படுத்த சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்காதது தான் இன்றைய நிலைக்கு காரணம். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஏன் இந்த நிலை இன்று ஏற்பட்டு இருக்க போகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண ரூ.120 கோடி மதிப்பில் வடிகால் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. மழை நீர் சூழ்ந்த பகுதிகளில், இப்போது பெரும்பாலான இடங்களில் தண்ணீர் இல்லை. சில இடங்களில் மட்டும் தான் உள்ளது.

மழைநீர் தேங்கி உள்ள பகுதி மக்கள் வசதி படைத்தவர்கள். அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் மற்றும் நிவாரண உதவிகள் வேண்டாம் என்று கூறிவிட்டனர். சிலருக்கு மட்டுமே
உதவிகள் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு
வருகிறது. நீர்நிலைகள், கால்வாய்களில், குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவை தற்போது அகற்றப்பட்டுள்ளது. கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் ஊருக்குள் இருக்கும் தண்ணீர் வெளியேறுவதில் சிரமம் உள்ளது. அவற்றை வெளியேற்ற 35 இடங்களில் மொத்தம் 1000 HP மோட்டார்கள் வைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படும்.
இந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டுள்ள கணேசபுரம், திருவள்ளுவர் நகர் போன்ற
இடங்களில், அடுத்த ஆண்டு ஒரு சொட்டு நீரும் தேங்காமல் விரைவாக வெளியேறும் வகையில் பணிகள் செய்யப்படும். மக்கள் மழைநீர் தேக்கத்தால் பாதிக்காத வகையில் நிரந்தர தீர்வு காணப்படும்” என்று கூறினார்.







