நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா?- டிடிவி தினகரன் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய இணையதளத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய…

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய இணையதளத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அப்போது திமுகவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்கிற நோக்கத்திற்காகவும், தமிழக மக்களின் நலன் கருதியும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தாம் முன்வந்ததாகவும் ஆனால் சிலரது ஆணவப் போக்கால் அது நடைபெற முடியாமல் போய்விட்டதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தற்போது அதிமுக செயலற்ற நிலையில் உள்ள கட்சியாக இருப்பதாக கூறிய டிடிவி தினகரன், தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்கான படிவங்களில் யார் கையெழுத்திடுவது என்பதில்கூட தெளிவில்லாத நிலை அக்கட்சியில் நிலவுவதாக கூறினார். இந்த சூழ்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தற்போது கூற முடியாது எனத் தெரிவித்த டிடிவி தினகரன், அதிமுக தலைமை தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வந்தபிறகுதான் அக்கட்சியுடனான கூட்டணி குறித்து தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.