பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று, திருநெல்வேலி பாளையங்கோட்டை கிரிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து நியூஸ்7 தமிழ் முன்னெடுக்கும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் கன்னிஷ் பீட்டர் உறுதி மொழியை வாசிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, மாதவிடாய் விடுமுறை வழங்க அரசை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கையெழுத்து இட்டனர். நிகழ்வில் பேசிய பள்ளியின் தாளாளர் பிரிட்டோ, பெண்களை சமமாக மதிப்பதுடன் சமூகத்தில் உரிய அங்கீகாரம் வழங்கி மதித்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தாம் எடுத்த இந்த உறுதி மொழியை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நெல்லை மாவட்டம், பணகுடி திருஇருதய சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள்வோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் பிரபு தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில் சுமார் 400 மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.இதையடுத்து மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஆசிரியர்களும் மாணவர்களும் கையெழுத்திட்டு தங்கள் முழு ஆதரவை தெரிவித்தனர்.
இதேபோல் திருச்சி, கருமண்டபம் சாலையில் அமைந்துள்ள, தேசிய கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா, தேசிய கல்லூரி முதல்வர் குமார், துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, ஆப்பிள் மில்லட் தாயார் உணவகத்தின் இயக்குனர் வீரசக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பாலின சமத்துவம் குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா, தாய் தான் உண்மையான ஹீரோ எனக்கூறிய அவர், குழந்தைகளின் ஆர்வத்தை பெற்றோர்கள் கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாலின சமத்துவம் குறித்த கருத்தை எப்போதும் முன்நிறுத்த வேண்டும் எனக்கூறிய ஆணையர், சமூக வலைதளங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாலின சமத்துவம் குறித்து உடற்கல்வி ஆசிரியர் சோமசுந்தரம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பாலின சமத்துவ உறுதி மொழி ஏற்றனர்.இதையடுத்து மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் முழு ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து நடத்தி வரும் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் குறை தீர்ப்பு கூட்டத்தில் இருந்த அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு நிகரென கொள் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா