நியூஸ் 7 தமிழ் ப்ரைம், நியூஸ் 7 தமிழ் பக்தி, நியூஸ் 7 தமிழ் அக்ரி உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளுக்கு பொதுமக்கள் அளித்த பேராதரவைத் தொடர்ந்து ஆரோக்கியத்திற்கென நியூஸ் 7 தமிழ் ஹெல்த் என்ற புதிய யூடியூப் சேனல் உதயமானது.
தாம்பரம் அருகே உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இருதய அறுவை சிகிச்சை மூத்த நிபுணர் தில்லை வள்ளல், தாம்பரம் சரக துணை ஆணையர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நியூஸ் 7 தமிழ் ஹெல்த் யூடியூப் சேனலை நியூஸ் 7 தமிழ் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
நிகழ்வில் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நியூஸ் 7 தமிழ் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன், திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சாய்ராம் கல்வி குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தில்லை வள்ளல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய இருதய அறுவை சிகிச்சை மூத்த நிபுணர் தில்லை வள்ளல், மக்கள் நலன் கருதி ஆரோக்கியத்திற்கென தனி யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
பொறுப்பும், பொதுநலனும் கொண்டு செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் ’வேண்டாம் போதை’ என்ற சமூக விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்தது. மக்களின் அளப்பெரிய ஆதரவைப் பெற்ற வேண்டாம் போதை விழிப்புணர்வு இயக்கம் நிறைவு பெற்றது. ஜூலை மாதம் முழுவதும் நடைபெற்ற இந்த இயக்கத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் மாணவர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் இணைந்து உறுதிமொழி ஏற்றது உலக சாதனையில் இடம்பெற்றது. உலக சாதனைக்கான சான்றிதழை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நியூஸ் 7 தமிழின் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியனிடம் வழங்கினார்.
https://twitter.com/news7tamil/status/1554413502101868545
‘மாரடைப்பு செய்தி இல்லா நாள்’
‘நியூஸ் 7 தமிழ் ஹெல்த்’ யூட்யூப் சேனல் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல், 25, 30 வயதில் மாரடைப்பு போன்ற செய்திகளை நாள்தோறும் ஒளிபரப்பி வருகிறோம், இதுபோன்ற செய்திகள் இல்லாத ஒருநாள் எங்களுக்கும் இருக்கட்டும் என்று போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழின் அன்புபாலம் சார்பில் வேண்டாம் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சாய்ராம் கல்லூரி மாணவர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.








