எதற்காக நியூஸ் 7 தமிழ் ஹெல்த் யூட்யூப் சேனல்?

நியூஸ் 7 தமிழின் புதிய படைப்பாக  நியூஸ் 7 தமிழ் ஹெல்த் யூட்யூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. மனிதன் இயற்கையோடு ஒன்றி வளர்ந்த ஒரு ஆகப்பெரும் சக்தி. சக்கரத்தைக் கண்டுபிடித்தது முதல் பூமியைத் தாண்டி எந்த…

நியூஸ் 7 தமிழின் புதிய படைப்பாக  நியூஸ் 7 தமிழ் ஹெல்த் யூட்யூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

மனிதன் இயற்கையோடு ஒன்றி வளர்ந்த ஒரு ஆகப்பெரும் சக்தி. சக்கரத்தைக் கண்டுபிடித்தது முதல் பூமியைத் தாண்டி எந்த கோளில் நீர் உள்ளது? எனக் கண்டறியும் வகையில் தொழில் நுட்பத்தில் வளர்ந்து நிற்பது மட்டுமல்ல மனிதருக்கான வளர்ச்சி. உலகம் தாண்டிய ஆச்சரியங்களை ஆராய முற்படும் மனிதர், அதற்கு அடிப்படையாய் அமையும் தனது உடல் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது.
ஆரோக்கியமான குடிமக்களைக் கொண்ட ஒரு மாநிலமே வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல முடியும். ஆரோக்கியமான மக்களே ஒரு நாட்டின் மிகப்பெரிய முதலீடாக இருக்க முடியும். அதனால் தான் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காத்திட, ஆளும் அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுக்கின்றன. ஆனால், காலசக்கரம் வேகமாய் ஓட, அதனோடு ஈடுகொடுத்து ஓடுவதிலேயே கவனம் செலுத்தும் மனிதர், ஏனோ அந்த ஓட்டத்திற்கான அடிப்படைத் தேவை ஆரோக்கியம் என்பதை மறந்துவிடுகின்றனர்.

எந்தவித நோயும் தாக்காதவாறு உடலை உறுதியாக வைத்துக்கொள்பவர்களே இந்த உலகின் ஆகச்சிறந்த மகிழ்ச்சிக்காரர். அதையே நமது ஆதித்தமிழர் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்றனர். அதாவது, நோயில்லா தன்மையே நம் முன்னோர் மிகப்பெரிய செல்வமாகக் கருதினர். அன்று நமது உணவும், சூழலும் அதற்கேற்றார் போல ஆரோக்கியமாகவே அமைந்திருந்தது. ஆனால் இன்று? இன்றைய சூழலில் 40 வயதைக் கடந்தாலே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து கொண்டு இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. ”அந்த வயதில் எல்லோருக்கும் வருவது தானே ” என்பது போல, அதையும் சகஜமாக ஏற்றுக்கொண்டு வாழப்பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதே கசப்பான உண்மை. இது சரியா?

“இழிவறிந்து உண்பான் கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான் கண் நோய்” என்கிறார் வள்ளுவர். அளவோடு உண்பவர் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார். அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாகிறார் என்பதே அதன் பொருள். அதிக உணவு என்பது ஆரோக்கியமற்ற உணவிற்கும் பொருந்தும். மரபு சார்ந்த, நன்கு சமைக்கப்பட்ட, ஆரோக்கியமான இயற்கை உணவுகளை மறந்து, அதிக கொழுப்புச் சத்தும், செயற்கை பொருட்களும் நிறைந்த, அரைகுறையாய் சமைக்கப்பட்ட, துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதை தற்போது நாம் அதிகரித்துள்ளோம். பசியை விடவும் ருசிக்கு முன்னுரிமை அளித்ததாலோ என்னவோ, அதன் தரத்தைக் கவனிக்க மறந்துவிட்டோம். விளைவு. நோய்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறோம். உடல் நலம் பேணல் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு முக்கியத்துவம் உளநலனுக்கும் வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவர், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமானவராகக் கருதப்படுகிறார். துன்பத்தில் இருக்கும் ஒருவர், உளநலம் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாய் உடல் நல பாதிப்பிற்கும் உள்ளாகிறார். சில நேரம் அதுபோன்ற மன அழுத்தம், உயிரிழப்பு முயற்சி போன்ற தவறான முடிகளையும் எடுக்க வைக்கும். எனவே, மனநலனிலும் அதிக அக்கரை காட்டுவது என்பது உடல் நலத்திற்கு ஈடான ஒரு அவசியமாகவே இருக்கிறது.

இதற்குச் சரியான உதாரணம் கொரொனா பேரலை தொடங்கிய காலம் தான். உலகையே புறட்டிப்போட்ட கொரோனா, மக்களின் வாழ்வைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மக்கள் பலரும் உயிரைப் பிடித்துக்கொண்டு மருத்துவமனைகளுக்கு ஓடியது, படுக்கைகள் எண்ணிக்கை பற்றாமல் மருத்துவமனைகள் திணறியது, ஒரே படுக்கையில் இருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம், மூச்சுத்திணறிய காட்சிகள், கொத்துக் கொத்தாய் எரிக்கப்பட்ட பிணங்கள் என கொரொனாவின் கோரத்தாண்டவம் நம்மில் ஒவ்வொருவரையும் பாதித்தது. மாஸ்க் போடவேண்டும், சானிடைஸர் பயன்படுத்தவேண்டும் என்பதோடு மக்களுக்கு இன்னொரு முக்கிய பொறுப்பும் வந்தது. அது தான், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு. உடல் ஆரோக்கியமே பிரதானம் என்ற கருத்தை ஆணித்தரமாக நமது மனங்களில் புகுத்திவிட்டது இந்த கொரொனா பேரிடர் என்பதை மறுப்பதற்கில்லை.

கொரோனாவுக்கு பின்னர் மக்களின் கவனம் உடல்நலத்தை நோக்கி அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது. சிறு காய்ச்சல் என்றாலும், விடுப்பு எடுப்பது, உடனே மருத்துவமனை சென்று பரிசோதிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதே இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் உடல் நலம் சார்ந்த சந்தேகங்களுக்கு, மருத்துவரை அணுகுவதற்கு முன்பாக நாம் முதலில் அணுகுவது இணையத்தளங்களைத் தான். லேசான தலைவலி என்றால் கூட அதற்கான மருத்துவத்தை இணையதளத்தில் தேடுகிறோம். ஆனால், நோயைக் குணமாக்கச் சரியான தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றனவா என்றால் அது மிகப் பெரிய கேள்விக்குறி தான். மருத்துவர்களின் அதிகாரப் பூர்வமற்ற, சில தவறான மருத்துவ முறைகளே இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. மேலும், சாதாரண உடல் வலி இருந்தால் கூட அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்ற பீதியைக் கிளப்பும் அளவிற்கே இருக்கின்றன இணையதள மருத்துவ முறைகள்.

இனி பொய்யான மருத்துவ கருத்துகளையும், தவறான முறைகளையும் கண்டு ஏமாற வேண்டாம். எது சரியான முறை என்ற குழப்பமும், தேடுதலும் வேண்டாம். உங்கள் உடலுக்கும், மனதிற்கும் தேவையான சரியான மருத்துவத்தை நாங்கள் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறோம். உடல் நலன் சார்ந்த சந்தேகங்கள், மனரீதியான பிரச்னைகள், அதனைப் போக்க வழிகள், புது புது நோய்களுக்கான மருந்துகள், வீட்டிலே செய்யக்கூடிய மருத்துவ முறைகள், நிம்மதியான வாழ்க்கைமுறைக்கான வழிகள் என அனைத்தும் மருத்துவ நிபுணர்களின் அதிகாரப்பூர்வமான கருத்துகளோடு மக்களிடம் கொண்டு சேர்த்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, பொறுப்பும் பொதுநலத்துடன் செயல்படும் நியூஸ் 7 தமிழின் உன்னதமான ஒரு புதிய முன்னெடுப்பு தான் நியூஸ் 7 தமிழ் ஹெல்த் யூடியூப் சேனல்.

ஆரோக்கியமான வாழ்விற்கான வழிகாட்டியாகவும், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்குமான நோய் குறித்த எச்சரிக்கையும், மருத்துவத்தையும் வழங்க உங்கள் குடும்ப மருத்துவராக யூடியூபில் களமிறங்குகிறது உங்கள் நியூஸ் 7 தமிழ் ஹெல்த்.

 

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.