அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில், நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் இதுகுறித்து 2018-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக, ‘ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசி பாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1,515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் (எடப்பாடி பழனிசாமி) உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், திருநெல்வேலி – செங்கோட்டைக் கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வண்டலூர் முதல் வாலஜா வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் “எஸ்.பி.கே அன்ட் கோ” நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவள்ளூர், கிருஷ்ணகிரி , பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” விற்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என ஆர்.எஸ் பாரதி மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கில் கடந்த 2018 அக்டோபர் 9-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எடப்பாடி பழனிசாமி மீதான புகார் வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். சி.பி்.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டில் இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடைவிதித்தது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படாமல் நிலுவையிலிருந்து வந்தது. இதனையடுத்து சுமார் நான்கு ஆண்டுகளாக விசாரணையின்றி நிலுவையிலிருந்து வந்த இந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வைத்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் 3ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தக்கல் செய்துள்ள பதில் மனுவில், நெடுஞ்சாலை சாலை ஒப்பந்தங்கள், திட்டங்களைத் தனது நெருங்கிய உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியது உலக வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது எனவும், இந்த செயலால் அதிக விலையை அரசு ஒப்பந்தங்களுக்குக் கொடுக்க நேர்ந்ததாகவும், இதனால் கடுமையான இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமி செய்த தவறுகள் மீதான விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குவதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்த வேண்டும் என அவர், அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.








