விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே வெளிநாட்டு மாடலில் புதிய கண்ணாடிப் பாலம் ; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூபாய் 37 கோடி செலவில் அமையவிருக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு …

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூபாய் 37 கோடி செலவில் அமையவிருக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு  இந்தியாவின் பல்வேறு
மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பணிகள் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர்.

இங்கு வரக்கூடிய  சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை ஆர்வத்தோடு பார்வையிடுவது வழக்கம்.

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு  சுற்றுலாப் பயணிகள் சென்று வர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது.
ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், மேலும் படகு
நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகள் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம்
குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்படும் படகு
போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்
திருவள்ளூர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ரூபாய் 37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை
சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இந்த
கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக
அமைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்
போது தங்களது பாதங்களின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான முதற்கட்ட பணி இன்று துவங்கியது. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும்
திருவள்ளுவர் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐஐடி
கல்வி வளாகத்திற்கு  அனுப்பி பாறைகளின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

இந்த ஆய்வுகளின் முடிவுகள் வந்த பிறகு விரைவில் பாலத்திற்கான கட்டுமான பணிகள்
தொடங்கும் எனவும் ஒரு வருடத்திற்குள் கண்ணாடி  பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.