தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு, போதைப் பொருள் சந்தையாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 3வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். காலை 10 மணிக்கு அவை தொடங்கியது முதல் எதிர்க்கட்சி அறையில் இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது அவைக்குள் சென்றார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கொலை, கொள்ளை, செயின்பறிப்பு என்ற செய்தி தான் நாள்தோறும் வருகிறது. அரசின் கவனத்திற்கு கொண்டு வர சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்றார்.
சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும், திமுகவின் முக்கிய பிரமுகர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 2 நாட்கள் கழித்துதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பெண் காவலரே புகார் செய்தும், டிஜிபி விசாரணை செய்த பிறகே கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாகவும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து, சந்தையாக மாறியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தினந்தோறும் கஞ்சா பிடிபடும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சபாநயகர் நடுநிலையோடு அனுமதியளிக்காதது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். கஞ்சா பிடிக்கப்படுவது தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் வரும் செய்தி சாதாரண செய்தியல்ல எனவும், தமிழ்நாடு அழிவுப்பாதைக்கு செல்லும் செய்தி என்றார்.







