நேபாளம் வெள்ளப்பெருக்கு: தமிழர்களை மீட்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

இந்தநிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “நேபாள வெள்ளத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 750 பேர் மாய்மாகியுள்ளதாகவும் செய்திகள் வருகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உட்பட பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநில அரசு உடனடியாக அமைத்துள்ள உதவி எண்களுக்கு வந்த அழைப்புகள் எத்தனை, அதன் பேரில் டெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டிலிருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 57 பேரின் நிலையை சுட்டிக்காட்டினார்.அவர்கள் அனைவரையும் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் பாமக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் லாண்ருக் என்ற பகுதியில் இருந்து ரசுவாகதி என்ற பகுதிக்கு 3 வாகனங்களில் பயணித்துள்ளனர்; இதில் நடுவில் சென்ற வாகனத்தில் இருந்த 20 பேர், வெள்ள பாதிப்புக்கு மத்தியில் தங்களது உடைமைகளை விட்டுவிட்டு, அங்கிருந்து திமுரே பகுதியில் உள்ள ஆயுதக் காவல் படையின் முகாமில் பாதுகாப்பாகத் தஞ்சமடைந்துள்ளனர் அவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன; அங்கு தமிழர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்; அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது; 57 பேரையும் மீட்பது தொடர்பாக காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் பேசி வருகிறோம்; சென்னையில் இருந்து 49 பேர் அங்கு சென்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.