இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுலிடம், அரியலூர் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் நீட் தேர்வு விலக்கு குறித்த கோரிக்கையை வைத்தார்.
காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணத்தை முன்னிறுத்தி கன்னியாகுமரியில் நேற்று நடைபயணத்தை தொடங்கினார். இரண்டாவது நாளான இன்றும் தொடர்ந்து நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில், நீட் விலக்கு கோரிக்கையுடன், அரியலூர் அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் ராகுல்காந்தியை சந்தித்தனர். அவருடன் நடந்து சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சந்திப்பு குறித்து அனிதாவின் சகோதரர் மணிரத்னம் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அனிதா இறந்து 5 ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கவில்லை. ஆகையால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தர வேண்டும் என்றேன். அதற்கு நிச்சயம் விலக்கு பெற்றுத் தருகிறேன் என்று ராகுல்காந்தி உறுதியளித்தார்.
அனிதா மட்டுமல்ல இதுவரை 15 பேருக்கு மேல் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்றேன். அதற்கு, தமிழ்நாடு மட்டும் ஏன் நீட் தேர்வை இப்படி எதிர்க்கிறது? என்று ராகுல் காந்தி கேட்டார், தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலம். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாநிலம். நீட் தேர்வால் மருத்துவ கட்டமைப்பே சிதைகிறது. ஆகையால் தமிழ்நாடு எதிர்க்கிறது.
தமிழ்நாட்டை போல் வேறு சில மாநிலங்களும் நீட் விலக்கு கேட்கின்றன என்றேன். இதைக்கவனமாக கேட்டுக் கொண்ட அவர், கண்டிப்பாக விலக்கு அளிப்போம் என்றார். அவரது வார்த்தைகள் நம்பிக்கையளிப்பதாக மணிரத்னம் கூறினார். மேலும் நாடு இக்கட்டான நிலையில் இருக்கிறது. சரியான நேரத்தில் ராகுல்காந்தி இந்த பயணத்தை தொடங்கியுள்ளார், அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
அவருடன் சுமார் 2 கி.மீ தூரம் நடந்து சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் தேர்தலில் அவரது வெற்றிக்கு என்னால் முடிந்ததை செய்வேன் என்றும் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்