முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

30% மகளிர் இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத் தீர்ப்பு சமூக அநீதி – ராமதாஸ்

தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள 30% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் சமூகநீதிக்கு எதிராக உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தினால், மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்படக் கூடும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி 1989 ஆம் ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை செயல்படுத்துவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 இல் 26 மற்றும் 27 ஆவது பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுப் போட்டிப் பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 70% இடங்களில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் போட்டியிட முடியும். மகளிருக்கான
இட ஒதுக்கீட்டை இப்போது 30 விழுக்காட்டில் இருந்து 40% ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மகளிருக்கு முதலில் 30% இடங்களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 70% இடங்களிலும் போட்டியிட அவர்களை அனுமதிப்பது ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி பலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மகளிருக்கு முதலில் 30% இட ஒதுக்கீடு
வழங்கிவிட்டு, மீதமுள்ள இடங்களிலும் போட்டியிட அனுமதிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளது. எடுத்துக்காட்டாக 200 பணியிடங்களை நிரப்பும்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 26.5% (53 இடங்கள்) ஒதுக்கீட்டில், மகளிருக்கு 30% (16 இடங்கள்) ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 37 இடங்களிலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கத் தேவையில்லை. தகுதி அடிப்படையில் ஒட்டுமொத்த இடங்களுக்கான
பட்டியலை தயாரித்து, அதில் 16 இடங்களை மகளிர் பிடித்திருந்தால், அதுவே போதுமானது. அதற்கு மேல் தனியாக மகளிருக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்தத் தேவையில்லை.

16 இடங்களுக்கு குறைவாக மகளிர் தேர்வாகியிருந்தால், எவ்வளவு இடங்கள் குறைவோ, அவ்வளவு இடங்களை மட்டும் மகளிருக்கு கூடுதலாக வழங்கலாம் என்பது தான் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஆகும். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனில்குமார் குப்தா தொடர்ந்த வழக்கில் 1995ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இத்தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்தத்
தீர்ப்பு சமூகநீதிக் கொள்கைக்கு எதிரானது. ஏற்க முடியாதது. இத்தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால் மகளிருக்கு அதிகபட்சமாகவே 30% இடங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகும் ஆபத்து உள்ளது.

பாலினத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. மகளிருக்கு இந்த முறையில் ஒதுக்கீடு வழங்கினால் அவர்களே அதிக இடங்களை கைப்பற்றிக் கொள்வர் என்பது தான் இந்தத் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள காரணம் ஆகும். இது காட்சிப்பிழையே தவிர உண்மை அல்ல. அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்பதால் தான் 1989ஆம் ஆண்டில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்பின் 33 ஆண்டுகளாகியும்
கூட, தமிழக அரசுப் பணிகளில் மகளிரின் பிரதிநிதித்துவம் இன்னும் 30 விழுக்காட்டை எட்டவில்லை. அதுமட்டுமின்றி, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான நியமனத்தில் கூட மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

மொத்தமுள்ள 1,141 பணியிடங்களில் மகளிருக்கு தனியாக 30% இட ஒதுக்கீடு வழங்கி, மற்ற இடங்களில் போட்டியிட அனுமதித்தும் கூட, 544 மகளிர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். இது 47.67% மட்டும் தான். இது தமிழகத்தில் மகளிர் மக்கள் தொகை விகிதத்துடன் ஒப்பிடும் போது குறைவாகும். இத்தகைய சூழலில் ஆண்களின் வேலைகளை மகளிர் பறித்துக் கொள்வதாக கூறுவதில் உண்மையில்லை.
அதேபோல், வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவமும், அதிகாரமும் கிடைக்காத பிரிவினருக்கு அவற்றை வழங்குவதற்கான கருவிதான் இட ஒதுக்கீடு ஆகும்.

உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், அவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது; அதுதவிர பொது இடங்களிலும் அவர்கள் போட்டியிட முடியும். இதேபோல், நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும் போது, வேலைவாய்ப்பில் மட்டும் மகளிருக்கு இட ஒதுக்கீட்டை மறுப்பது நியாயமல்ல. இதை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும்படி தான் நீதிமன்றம் பரிந்துரைத்திருக்க வேண்டுமே
தவிர, மகளிருக்கான இட ஒதுக்கீட்டை மறுத்திருக்கக் கூடாது. அதனால் தான் இது சமூக அநீதி.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த
வேண்டும். அவற்றின் மூலம் அரசு வேலைகளில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறையச் சம்பவங்களைச் செய்யப் போறோம்! காத்திருங்கள்’ – முதலமைச்சர்

Arivazhagan Chinnasamy

ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட்டுதான் தீர்மானம் நிறைவேற்ற முடியும்: வைத்திலிங்கம்

EZHILARASAN D

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

Web Editor