இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணம் வெற்றி பெற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை கட்சி தலைமை செய்து வருகிறது. அந்த வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ’இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் 150 நாள் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த தேசிய அளவிலான நடைபயணத்தை , கன்னியாகுமரியில் இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் ராகுல் காந்தியின் நடைபயணம் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ராகுல் காந்தி, இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்க, நமது குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்தி பிடிக்க, நாட்டு மக்களை அன்பால் ஒன்றிணைப்பதற்கான பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறார். சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரிமுனையைக் காட்டிலும் இந்த “இந்திய ஒற்றுமைப் பயணத்தைத்” தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது.
மதத்தால் பிளவுபடுத்தலும், கேடு விளைவிக்கும் வெறுப்புப் பரப்புரைகளும் மக்களின் மனங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவை ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரும்பணியை நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுத்துள்ளது. பெருமைமிகு நமது குடியரசை மீண்டும் கண்டெடுக்கும் தனது நோக்கத்தில் “இந்திய ஒற்றுமைப் பயணம்” வெற்றிபெற வாழ்த்துகிறேன்.








