நீட் நுழைவுத்தேர்வை கொண்டு வந்தது யார் என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை திமுக நடத்திய பிறகே, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அமலுக்கு வந்ததாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தாம் முதலமைச்சராக இருந்த போது தமது தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி கையெழுத்திட்டதால் தான் உள்ஒதுக்கீடு கிடைத்ததாக கூறினார்.
அதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன், 7.5 சதவீத இடஒதுக்கீடு வந்ததே, அதிமுக அரசு நீட் தேர்வை கொண்டு வந்ததால் தான் என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி , 2010ல் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் தான் நீட் நுழைவு தேர்வு வந்தது எனக் கூறினார். இதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன், ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு இல்லை. தங்கள் (எடப்பாடி பழனிசாமி) ஆட்சியில் தான் நீட் வந்தது என விமர்சித்தார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், நீட் தேர்வு மசோதாவுக்கு அஸ்திவாரம் போட்டது திமுக தான். அன்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்த திமுகவின் காந்தி செல்வன் தான் நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்திட்டார் என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழையவில்லை என தெரிவித்தார்.