இலங்கையில் கடும் பொருளாதார சூழ்நிலை நிலவி வருவதால், தமிழ்நாட்டில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான தனி தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்த நிலையில், தனது சொந்த நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் தருவதாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமன அடிப்படையில் உதவிடும் வகையில் அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. அவற்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு அனுமதி அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. இதையடுத்து, அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த தனி தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், மனிதாபிமான அடிப்படையில் கை கொடுக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றார். மக்கள் படக்கூடிய துன்பங்கள் துயரங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்ணென்னை வாங்க 6 மணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. பேருந்து ரயில்கள் போக்குவரத்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களில் பணிப்புரிய கூடிய தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பால் விலை, பால் பவுடர் உணவுப்பொருட்கள் விலை அனைத்தும் 100%உயர்ந்துள்ளதால் பச்சிளம் குழந்தைகள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இன்று இலங்கை நாடு அனைத்து பல்வேறு இன்னல்களை அடைந்து வரும் இந்த சூழலில் உலக நாடுகள் பலவும் அனுதாபத்தோடு பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் தீர்மானம் மனிதநேயத்தில் தமிழர்கள் உலகத்திலேயே உயர்ந்தவர்கள் என்பதின் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்றார். இந்த நிலையில் அரசு சார்பில் 123 கோடி மதிப்பில் அங்கு வாழும் மக்களுக்கு நிவாரண உதவியாக அளிக்கப்படுகின்ற நிதியில், தன் குடும்பத்தின் சார்பாக 50 லட்சம் ரூபாயை நிவாரண உதவியாக வழங்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும் சொந்த நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினானர்.






