மழை, வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக சென்னை நகர் குளம் போல் தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும், இதனால் ஏழை மக்கள் அல்லல்படுவதை பார்க்கும்போது மிகுந்த மனவேதனை ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.
மழை, வெள்ளப் பாதிப்பின்போது கடந்த கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை களை இப்போதைய ஆட்சியாளர்கள் முன் மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் நிலையைப் பார்த்தால் முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் காகிதத்தோடு நின்றுவிட்டனவோ என்ற அச்சமும், ஐயப்பாடும் எழுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓரிரு நாள் மழைக்கே இப்படி என்றால், இனி வரும் நாட்கள் எப்படி இருக்குமோ? என்ற கவலை அனைவர் நெஞ்சிலும் உள்ளதால் நிலைமையின் தீவிரம் உணர்ந்து அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும் என ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தியுள்ளனர்.







