“திமுகவை அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவரானார்” – அமைச்சர் கே.என்.நேரு!

தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் காரணமாகவே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராகியுள்ளார். அவர் தலைவராக வருவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் என்பதை பொதுவெளியில் சொல்ல முடியாது. அதிமுக, பாஜக கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்துவிட்டு கூட்டணி ஆட்சியா கணித்து ஆட்சி அமைப்பார்களா என்பதை முடிவு செய்துவிட்டு எங்களை பற்றி பேசலாம்.

பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரிகள் தடை ஒதுக்கீடு தொடர்பாக இருக்கும் பிரச்சனையை சரி செய்ய மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்த வியாபாரிகள் சந்தித்து அவர்களது கோரிக்கை குறித்து பேசி உள்ளார்கள்.

பொதுப்பணித்துறை நிர்ணயத்தை கட்டணத்தை செலுத்தி விட்டு கடைகளை நடத்திக் கொள்ளலாம் என ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் காரணமாகவே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வருகிறது.

வரும் ஐந்தாம் தேதி நெல்லை மாவட்டம் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகங்கள் நடத்தப்பட உள்ளது. சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது சாலைகள் செப்பனிடப்பட்டு தேரோட்டம் சிறப்பான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.