பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி!

சென்னை மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அடுத்தடுத்து போதைப்பொருட்கள் பறிமுதல்.. தமிழகத்தில் அதிகரிக்கும் புழக்கம்?

“போதைப்பொருட்களை மத்திய புலனாய்வுப் பிரிவினரே அடுத்தடுத்து பறிமுதல் செய்யும் நிலையில், தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது? “வெறும் வாயில் வடை சுடுவதையும், விளம்பர வெறியில் ரீல்ஸ் வெளியிடுவதையும்” நிறுத்திவிட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்! சென்னை மாதவரத்தில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான கொடிய வகை ஹெராயின் போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்து, அது தொடர்பாக இருவரைக் கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருட்களை இதே மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்திருந்த நிலையில், தற்போது தலைநகர் சென்னையில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்கிறது?

இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிலான போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் அடுத்தடுத்து பறிமுதல் செய்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட திட்டத்தின்படி அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது?

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொடங்கி நாகப்பட்டினம் வரை போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பதுக்கலையும் கண்காணித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர்தான் அவற்றைப் பறிமுதல் செய்கிறார்கள் என்றால், 264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, 54 கோடி ரூபாய் செலவில் தலைமை அலுவலகம், 65 காவல் ஆய்வாளர்கள், 130 காவல் உதவி ஆய்வாளர்கள், 325 காவலர்கள் எனப் பெரும் படையையே உருவாக்கியிருப்பதாகக் கூறப்படும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எதற்காக அமைக்கப்பட்டது? மக்கள் வரிப்பணத்தில் இத்தனை கோடி ரூபாய் செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தத் தனிப்பிரிவின் செயல்பாடுதான் என்ன? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது.

‘Virtual Warriors’ மூலம் செய்தி ஆசிரியர்களை விமர்சிப்பதா?

போதை மாத்திரைகள், ஊசிகள், சாக்லெட்டுகள் எனப் பல்வேறு வடிவங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பட்டதாரி இளைஞர்கள் வரை பலரது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் இத்தகைய போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வியடைந்துள்ள வக்கற்ற தவெக அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையையும், சொந்தக் கட்சி நிர்வாகிகளின் அடாவடித்தனங்களையும் சுட்டிக்காட்டி கட்டுரைகள் எழுதும் செய்தி ஆசிரியர்களை, ‘Virtual Warriors’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கட்சியினரை ஏவிவிட்டு Abuse செய்து கொண்டிருப்பது கேவலமான செயலாகும்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

எனவே, போதை ஒழிப்புப் பேரணிகள் நடத்துவது, சாலையெங்கும் விழிப்புணர்வுப் பதாகைகளை வைப்பது போன்ற வெறும் வாயில் வடை சுடும் விளம்பர நடவடிக்கைகளால் போதைப்பொருட்களை ஒருபோதும் ஒழித்துவிட முடியாது என்பதை இனியாவது உணர்ந்து தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையே சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், கடத்தலையும், பதுக்கலையும் வேரோடு ஒழிக்க, போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கும் போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜயை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.