GTA 5 to GTA 6.. 13 ஆண்டுகளில் இந்தியா அடைந்த மாற்றம்! பிரதமர் மோடியின் வைரல் பதிவு!

GTA 5 வெளியாகி GTA 6 அறிமுகமாகும் வரை கடந்த 13 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.

GTA 6 வெளியீடு.. உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்!

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (GTA) வீடியோ கேம் தொடரின் 6-வது பாகம் இன்று (நவம்பர் 19) நள்ளிரவு வெளியாகியுள்ளது. இதற்கு முந்தைய பாகமான GTA 5 கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதனால், இரண்டு முக்கிய பாகங்களுக்கு இடையே சுமார் 13 ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இந்த நீண்ட காத்திருப்புக்குப் பிறகு GTA 6 வெளியாகியுள்ளதால், உலகம் முழுவதும் உள்ள கேமிங் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். பலரும் நள்ளிரவு முதலே விளையாடத் தொடங்கியுள்ளதுடன், சிலர் விளையாடுவதற்காகத் தூக்கத்தையும் தவிர்த்து, வேலைக்கும் விடுப்பு எடுத்துள்ளனர்.

13 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி.. மோடி பட்டியல்!

GTA 6 வெளியீட்டைச் சுற்றியுள்ள இந்த உலகளாவிய ஆர்வத்தைப் பயன்படுத்தி, கடந்த 13 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியைப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். குறிப்பாக, ‘Fragile Five’ எனக் குறிப்பிடப்பட்ட பொருளாதார நிலையிலிருந்து உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா வளர்ந்திருப்பது, வறுமை குறைப்பு, நிதிச் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றம், UPI டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் விரிவாக்கம், வெற்றிகரமான தூய்மை இந்தியா இயக்கம், குறைந்த கட்டணத்தில் இணைய வசதி உள்ளிட்ட சாதனைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனைகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நக்சல் பாதிப்பில்லாத இந்தியாவை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2013-ம் ஆண்டில் GTA 5 வெளியானதற்கும், 2026-ம் ஆண்டில் GTA 6 வெளியாகியிருப்பதற்கும் இடைப்பட்ட காலத்தை இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துரைக்கும் காலகட்டமாக மோடி தனது பதிவில் பயன்படுத்தியுள்ளார்.

GTA 6 கேம்.. வெளியீட்டுக்கு முன்பே பில்லியன் டாலர் வருவாய்!

ராக்ஸ்டார் கேம்ஸ் (Rockstar Games) நிறுவனம் உருவாக்கியுள்ள GTA 6 விளையாட்டு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனைப் பிரதேசமான லியோனிடாவில் (Leonida) நடைபெறுகிறது. இதில், வைஸ் சிட்டி (Vice City) முக்கியக் களமாக அமைந்துள்ளது. லூசியா காமினோஸ் மற்றும் ஜேசன் டுவால் ஆகிய இரண்டு கதாபாத்திரங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருவரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் கூட்டாளிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

சந்தை ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் (Sensor Tower) மதிப்பீட்டின்படி, GTA 6-க்கான முன்பதிவுகள் 1.5 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. வெளியீட்டுக்கு 9 நாட்களுக்கு முன்பே முன்பதிவு வருவாய் 1 பில்லியன் டாலரைக் கடந்ததாகவும், இதே காலகட்டத்தில் Call of Duty: Modern Warfare II பெற்ற வருவாயைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. GTA 6 இதுவரை இல்லாத மிகப்பெரிய பொழுதுபோக்கு வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மெட்டாகிரிட்டிக் (Metacritic) தளத்தில் வெளியான ஆரம்பகட்ட விமர்சனங்களிலும் இவ்விளையாட்டு ஏறக்குறைய முழுமையான மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.