“தமிழில் பெயர் பலகை வைக்கப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

அரசின் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் யோகா திருவிழாவிற்காக அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி மட்டும் இடம் பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு சமூக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை கருப்பு மை கொண்டு அழித்தும் அதனை கிழித்து எரிந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, அரசு நிகழ்ச்சியின் அழைப்பிதழ்கள், விளம்பர பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக அனைத்து அரசு துறைகளுக்கும் மீண்டும் அறிவுறுத்தப்படும் என கூறினார்.

மேலும் நீதிமன்றம் சென்றாவது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மாநில அந்தஸ்து பெறுவோம் என தெரிவித்துள்ளது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.