சொத்து தகராறு : சிறையில் இருந்து ஜாமினில் வந்தவர் வெட்டி கொலை – போலீசார் விசாரணை!

சொத்து பிரச்சனை காரணமாக மாமாவை படுகொலை செய்தவர் ஜாமினில் வெளிய வந்த நிலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த திம்மராயன் என்பவர் ரியல் எஸ்டேட் வேலை செய்து வந்தார். இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் நிலம் சம்மந்தமான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ‌கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே காந்தி நகர் பகுதியில் உள்ள நிலத்தில் வாழை தோப்பில் திம்மராயனை பின்தொடர்ந்து வந்த சக்கரவர்த்தி தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் ஒன்பது நாட்களுக்குப் பின்னர் போலீசார் சக்கரவர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த ‌சக்கரவர்த்தியை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக சக்கரவர்த்தியும் அவருடைய இரண்டாவது மனைவி கௌரி ஆகிய இருவரும் செல்ல இருந்தனர். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தபோது இவர்களை நோட்டமிட்டு காரில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் சக்கரவர்த்தியை சாராமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனை தடுக்கச் சென்ற கௌரிக்கும் சுண்டுவிரலில் வெட்டு காயம் பட்டுள்ளது. பின்னர் இருவரும் மயங்கிய நிலையில் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட இடத்தை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையும் மேற்கொண்டார். சொந்த மாமனை சொத்து பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்து விட்டு ஜாமீனில் வெளியே வந்த சக்கரவர்த்தியை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஐந்து நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.