காசாமீது ஒரே இரவில் 2 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… 54 பேர் பலி!

காசாவில் நேற்று ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி கடும் சேதமடைந்த வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா நகர மக்கள், நூற்றுக்கும் அதிகமானோர் ஃபஹ்மி அல்-ஜர்காவி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த பள்ளி மீதான தாக்குதல் உட்பட நேற்று இரவு இரண்டு தனித்தனி வான்வழித் தாக்குதல்களை காசாமீது இஸ்ரேல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல்களில் மொத்தம் 54 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாக அல்-அஹ்லி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஃபடெல் எல்-நைம் தெரிவித்தார்.

இஸ்ரேலின் தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிட, பயங்கரவாதிகளால் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பகுதிகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஹமாஸ் “காசா மக்களை கேடயங்களாக” பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.