வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்கு என்னுடைய ஆதரவு என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது தேர்தல் நேரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 3 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதனையடுத்து 4-ம் கட்ட வாக்குப்பதிவு மே. 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மே 13-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி சூராவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்கு என்னுடைய ஆதரவு என தெரிவித்திருப்பது அதிர்வலையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது X தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வாரணாசியில் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளை நான் ஆதரிக்கிறேன். ஆனால், பாஜக காரியகர்த்தா வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை நான் ஆதரிக்கிறேன். ஏன்? ஏனென்றால், ஏப்ரல் 2020 முதல் லடாக்கின் 4,064 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கைப்பற்ற சீனாவை அனுமதித்த மோடி, ஒரு கைப்பிடி மண்ணை கூட யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்ற பொய்யைச் சொல்கிறார். ஆனால் லடாக்கியர்கள் செம்மறி ஆடுகள் மேய்க்கும் உரிமையை கூட இழந்துள்ளனர்.
இவ்வாறு சுப்ரமணியன் சிவாமி கூறியுள்ளார்.
I support Nationalist voters refusing to vote for Modi in Varanasi. I support vote for BJP karyakarta candidates. Why? Because Modi has allowed China to brazenly grab 4064 sq kms of Ladakh since April 2020 and told a lie “ koi aaya nahin…”. depriving Ladakhis of sheep grazing.
— Subramanian Swamy (@Swamy39) May 9, 2024







