மன்னார்குடி அருகே கடைகளுக்கு அதிக வரி விதித்ததாக நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இஸ்லாமியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் பகுதியில், பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான வக்பு வாரிய இடத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் இரட்டை வரி விதிப்பதாகவும், அபரிவிதமான வரி விதித்து அடாவடியாக வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.
நகராட்சி ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள், கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் வாய்மொழி உத்தரவிட்டதாகக் கூறி அப்பகுதியில் உள்ள கடையைப் பூட்டி சீல் வைத்துள்ளனர்.மேலும், இது குறித்து விளக்கம் கேட்க வந்த பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகளை, அதிகாரிகள் தரக் குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
நகராட்சியின் இப்போக்கைக் கண்டித்து, கூத்தாநல்லூர் நேருஜி சாலையில், பெரிய பள்ளிவாசல் நிர்வாக குழு ஜமா அத் சார்பில், இஸ்லாமியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறி செயல்படும் கூத்தாநல்லூர் நகராட்சி அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள வணிகர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– சௌம்யா.மோ







