இலங்கை உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் 9 பிரமாண்ட முருகன் கோயில்கள் கட்டப்படும் என லண்டனை சேர்ந்த ஸ்ரீ சரவண பாபா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர் பூர்வீக பகுதிகளில் தொடர்ந்து சிங்கள குடியேற்றம் மற்றும் புத்த மடாலயங்களை அமைப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இலங்கையில் உள்ள பூர்வீக தமிழ் நிலங்களில் 3 கோயில்கள் உள்பட 9 பிரமாண்ட முருகன் கோயில்களை பல்வேறு நாடுகளில் நிறுவ உள்ளதாக ஸ்ரீ சரவண பாபா தெரிவித்துள்ளார். அதோடு தமிழ் கடவுளான முருகனின் நாமத்தை உலகமெல்லாம் பரப்ப உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
லண்டன் மாநகரில் மிகப் பெரிய கோயிலை புனரமைத்து கட்டியுள்ளதாகவும், கனடாவில் மிகப்பெரிய அளவில் நிலத்தை வாங்கி, அங்கும் முருகனின் கோயில் ஒன்றை கட்ட ஆரம்ப வேலைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஞான வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த ஆண்டு தொடக்கத்தில் நிகழ்ந்துள்ளதாகவும் இத்திருப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனவும் லண்டனை சேர்ந்த ஸ்ரீ சரவண பாபா தெரிவித்துள்ளார்.
இதேபோல், சுவிஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில், ஈழத் தமிழர்களோடு இணைந்து கோயில்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







