சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: உயிரிழப்பு 3-ஆக உயர்வு: 11 பேர் கைது!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ள நிலையில் இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாகத் தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், தொழிலாளர்கள் இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திருத்தங்கல்லில் சட்ட விரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட திருப்பதி, முத்துக்குமார், கணேசன், ஞானசேகரன், நாகார்ஜுன், ராஜசேகர், அந்தோணி ராஜ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பட்டாசு மூலப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.