திருப்பத்தூர் ஶ்ரீபூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவில் 300க்கும்
மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோவில் 89 ம் ஆண்டு
பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு 13-ம் ஆண்டு வசந்த பெருவிழா நடைபெற்று
வருகிறது. பத்து நாள் விழாவாக நடைபெற்று வரும் இந்த வசந்த திருவிழாவில் கடந்த
பத்தாம் தேதி அன்று காலை கொடியேற்றுத்துடன் துவங்கியது.
விழாவின் ஐந்தாம்திருநாள் இன்று பால்குட திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. திருப்பத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய இளைஞர்கள் (சோழிய வெள்ளாளர் இளைஞர்கள்) ஒன்றிணைந்து பால்குடம், பூத்தட்டு மற்றும் அன்னதான விழா நடத்தினர். சாம்பான் ஊரணி அருகே உள்ள ஸ்ரீ கோட்டை கருப்பர் கோவிலில் இருந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், பூத்தட்டுகளை தலையில் சுமந்து நான்குரோடு, கீழரத வீதி,
தேரோடும் வீதிகள் வழியாக கோயில் திருக்குளத்தை சுற்றி பூமாயி அம்மன் கோயில்
வந்தடைந்தனர். அதன்பின்பு பக்தர்கள் கொண்டுவந்த பாலால் பூமாயி அம்மனுக்கு
அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம் சந்தனம்,குங்குமம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் வெள்ளி அங்கியில், சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் பூமாயி அம்மனுக்கு பூச்சொரிந்தனர். பின்பு அந்த பூக்களை பெண்கள் மடி ஏந்தி வாங்கி சென்றனர். பால்குடம் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பால்குடம், பூ உள்ளிட்ட பொருட்கள் வசந்த பெருவிழா குழு நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்பட்டது. காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெகு விமர்சையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருப்பத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் செய்திருந்தனர்.







