தேவைப்படும் அளவுக்கு மின்விநியோகம் செய்ய மின் வாரியம் தயார் – அமைச்சர் செந்தில்பாலாஜி

கோடைகால மின்சார தேவையை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து, சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை…

கோடைகால மின்சார தேவையை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து, சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குநர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. சீரான மின்விநியோகம் வழங்க தேவையான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2020-21 இல் 16,481 மெகா வாட்டாக இருந்த மின் நுகர்வு, இந்த ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் 19,387 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. இருந்தும் எந்தவித பாதிப்புமில்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையின் மின்தேவை அதிகமாக உயர்ந்துள்ளது. அதிகமாக 2019-20 இல் 3,738 மெகாவாட். தற்போது 4,016 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் கடந்த 2 நாட்களாக ஒரு சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான அளவிற்கு மின்சாரம் வழங்க தயாராகவுள்ளோம். மாநிலத்தின் சராசரி தேவையைவிட, சென்னையின் தேவை அதிகமாக உள்ளது.

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கேபிள்களின் திறனை அதிகரிக்க, புதிய கேபிள்களை அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மின் தடை என்பது பராமரிப்பு பணிகளுக்காக செய்வது. மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு மின்தடை தொடர்பான புகார் அழைப்புகள் குறைந்துள்ளன. கோடை காலத்தில் மின்சார தேவையை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். கடந்த ஆட்சிக்காலங்களில் மின்சாரம் இல்லாமல் இருந்த நிகழ்வுகள், போராட்டங்கள் குறித்தெல்லாம் புத்தகமாக தயார் செய்து வைத்துள்ளோம். முந்தைய காலம் மாதிரி அதிகமான பழுதுகள் இல்லை என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.