பெண்களுக்கு சமமான அதிகாரம் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது:  மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

பெண்களுக்கு சமமான அதிகாரம் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில்…

பெண்களுக்கு சமமான அதிகாரம் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய இந்தியாவில் பெண்களுக்கு சமமான அதிகாரம் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தல்,  அதிகாரமளித்தல், செழிப்பாக்குதல்,  சம உரிமை வழங்குதல்,  மதிப்பளித்தல்,  தேவையான வசதிகளை ஏற்படுத்துதல்,  சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய 7 நோக்கங்களுடன் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளை காப்போம் திட்டம்:

பெண் குழந்தைகளின் நலனை பாதுகாக்கவும் அவர்களின் கல்வியை உறுதிபடுத்தவும் கடந்த 2015-ல் பிரதமர் மோடியால்  ‘பெண் குழந்தைகளை காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்’  தொடங்கப்பட்டது.  இத்திட்டம் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த சேவைகள் மையம்:

சமூகம்,  குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வித பாகுபாடின்றி பாதுகாப்பளிக்கவும் ஆதரவளிக்கும் நோக்கிலும்  ‘ஒருங்கிணைந்த சேவைகள் மையம்’ (ஒன் ஸ்டாப் சென்டர்) தொடங்கப்பட்டது.  இத்திட்டத்தின் கீழ் 733 மையங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது 703 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இம்மையங்கள் தனியார் மற்றும் பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை,  கடத்தல், திராவக வீச்சு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி,  சட்ட உதவி,  ஆலோசனை உதவி,  தங்குமிட வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… கார் ஓட்டுநரின் திக்… திக்… அனுபவம்! 

முத்தலாக் சட்டம்:

இஸ்லாமிய சமூகத்தில் உள்ள உடனடி முத்தலாக் விவாகரத்து நடைமுறையை தடை செய்வதற்கு மத்திய அரசு ‘முத்தலாக் தடைச் சட்டத்தை’ நிறைவேற்றியது.  இதன் மூலம் சமூகத்தில் பெண்களுக்கான உரிமை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம்:

கர்ப்பிணி,  பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மத்திய அரசால் தொடங்கப்பட்ட நிதியுதவி திட்டமே ‘பிரதமரின் மாத்ரு வந்தனா’ திட்டமாகும்.  இத் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம்:

பெண்களின் சுகாதார நலனை மேம்படுத்துவதற்காக  ‘பிரதமரின் மக்கள் மருந்தக மையங்கள்’ தொடங்கப்பட்டன.  இம்மையங்களில் மிகக்குறைந்த விலையிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் 10,000 மருந்தகங்கள் மூலம் ரூ.1-ல் சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் இம் மையங்களில் சானிட்டரி நாப்கின் வாங்கும் கிராமப்புற பெண்களின் எண்ணிக்கை 11-12 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இம்மையங்களில் விற்பனை செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களின் எண்ணிக்கை தேசிய அளவில் மொத்தமாக (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்) 30 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்:

ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ‘பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ்’ நவம்பர் 30-ம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 கோடி பேரில் 3.5 கோடி பேர் பெண்களாவர்.

ஸ்டான்ட் அப் இந்தியா திட்டம்:

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக தொடங்கப்பட்ட ‘ஸ்டான்ட் அப் இந்தியா’ திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தில் 80 சதவீத பயனாளர்களாக பெண்களே உள்ளனர்.

பிரதமர் வீட்டு வசதித் திட்டம்:

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் பதியப்பட்ட வீடுகளில் 70 சதவீத வீடுகள், பெண்களின் பெயரிலேயே பதிவாகி உள்ளது.  பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட ‘செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ்’ 3 கோடி பெண் குழந்தைகளின் வாழ்வு வளமையாக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டிற்கு முன் 50 சதவீதத்துக்கும் குறைவான பெண்களிடம் மட்டுமே வங்கிக் கணக்கு இருந்தது.  ஆனால் தற்போது ஏறத்தாழ நாட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் வங்கிக் கணக்கு உள்ளது.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு:

நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தியுள்ளார்.  நிராகரிக்கப்பட்டு வந்த பெண்களுக்கான உரிமையை பிரதமர் மோடி நிலைநிறுத்தியுள்ளார்.

மேலும் பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 10 கோடி பெண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டுள்ளது.  நாட்டில் உள்ள 10 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் முன்னெடுப்பின் கீழ் தற்போது வரை 50 சதவீத வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.