கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கபாதையில் மழை நீருடன் கழிவுநீர் தேங்கியதை அடுத்து அமைச்சர் பொன்முடி வேட்டியை மடித்துகட்டி கொண்டு ஆய்வு செய்து கழிவுநீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.
விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்க
தரைப்பாலத்தில் சிறிய அளவில் மழை பெய்தாலே சுரங்க பாதையில் மழைநீர் மூழ்கி தேங்கி நிற்கும். இதனால் பொதுமக்கள் மூன்று கிலோ மீட்டர் அளவு சுற்றி விழுப்புரம் நகரத்தை நோக்கிச் செல்லக் கூடிய நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக மீண்டும் ரயில்வே சுரங்க பாதையில் முட்டி அளவு மழைநீர் தேங்கியது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். பொய்யபாக்கம், காக்குப்பம், கீழ்பெரும்பாக்கம் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிக்கு செல்ல மூன்று கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் முட்டி அளவு நீரிலும் இருசக்கர வாகனங்களை இயக்கி சென்றனர்.
அப்போது நீரானது வாகனத்துக்குள் புகுந்ததால் சிலரது வாகனங்கள் பழுது ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர். சுரங்க பாதையில் நீர் தேங்கியது குறித்து உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சுரங்கப்பாதையில் மழை நீருடன் கலந்த கழிவுநீரில் அமைச்சர் பொன்முடி வேட்டியை மடித்து கட்டி கொண்டு
சுரங்கப் பாதையில் நடந்தே சென்று முட்டி அளவு நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது நகராட்சி நிர்வாகத்தினர் தண்ணி தேங்கி இருக்கும்போது ஏன் வெளியேற்ற
தாமதமாகிறது என்று ஆணையரை கடுமையாக கடிந்து கொண்டார். அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் நகராட்சி நிர்வாகம் தேங்கியிருந்த நீரை வாகனங்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனர். மேலும் மழை காலம் நெருங்கி வருவதால் டீசல் பம்ப் செட்டுகள் மூலம் துரிதமாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் நகரமன்ற தலைவி தமிழ்செல்வி உடனிருந்தனர்.








