“ஏசி ரூம் அதிகாரி நான் அல்ல” – ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

ஏசி ரூம் அதிகாரி நான் அல்ல, கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு இந்த துறையில் பணியாற்றுவேன் எனக் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள்…

ஏசி ரூம் அதிகாரி நான் அல்ல, கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு இந்த துறையில் பணியாற்றுவேன் எனக் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் 37 உணவு குடோண்கள் உள்ளது. இதில், தரமான பொருள் உள்ளதா? என்பதனை ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்த அவர், 3,477 நியாய விலை கடைகள் மூலம் 2.22 கோடி அட்டைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொது மக்களுக்கு நல்ல முறையில் உணவு கிடைக்க வேண்டும் என்றால், நல்ல முறையில் கொள்முதல் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம் 10 நியாயவிலைக்கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் மக்களுக்குச் சிறந்த முறையில் பொருட்கள் கிடைக்கும் எனக் கூறினார்.

மேலும், அரசின் அமுதம் விற்பனையகம் உலகத்தரத்தில் தரம் உயர்த்தப்படும் எனக் கூறிய அவர், மக்களை ஏமாற்றி மற்ற மாநிலத்திற்கு எடுத்துச் சென்றால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அடுத்த வாரம் டெல்டா மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய படம் ‘டான்’; படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்’

விரைவாக நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்துகிறார்களா என்பதை ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்த கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் செயலாளர் நெல் கொள்முதல் தாமதமாகச் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏசி ரூம் அதிகாரி நான் அல்ல, கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு இந்த துறையில் பணியாற்றுவேன் எனத் தெரிவித்த அவர், விவசாயிகளின் நெல் கொள்முதல் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.