லைட்டான துறைக்கு வெயிட்டான அமைச்சராக உதயநிதி கிடைத்திருப்பதாகவும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி போல உதயநிதி செயல்பட வேண்டும் எனவும் சிவகங்கை அதிமுக உறுப்பினர் செந்தில்நாதன் பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடர்ச்சியாக துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை மற்றும் கைத்தறி – துணிநூல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் “ ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தான் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டு பல்கலைக்கழகம், விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக கூறினார்.
அதன் தொடர்ச்சியாக வந்த எடப்பாடி பழனிசாமியும், விளையாட்டுத்துறைக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்ததாகவும், ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி போலவே உதயநிதி ஸ்டாலினும் செயல்பட வேண்டும் எனவும் செந்தில்நாதன் தெரிவித்தார்.
மேலும் காவிரி வைகை குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர் சிவகங்கையை முதல்நிலை நகராட்சியாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட சிவகங்கை தொகுதிக்குட்பட்ட இடங்களில் தேவைப்படும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
வருமானத்தை பெருக்கும் வகையில் தனிநபர் கைகளில் இருந்த டாஸ்மாக் துறையை கையகப்படுத்தியவர் ஜெயலலிதா எனவும் அதன் மூலம் பெரும்பாலான வருவாய் அரசுக்கு பெறப்பட்டதாகவும் தெரிவித்த அவர் ஜெயலலிதா போல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருமானத்தை பெருக்க வேண்டுமே தவிர ஏற்கனவே உள்ள திட்டங்களை நிறுத்தி செலவை குறைத்து வருமானத்தை பெருக்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.
மேலும் பல பைனான்ஸ் கம்பெனிகள் 2 ஆயிரம் கோடி, 3 ஆயிரம் கோடி என ஏமாற்றி விட்டு செல்வதாகவும், அது போன்ற பைனான்ஸ் கம்பெனிகளை ஆரம்பிக்கும் முன்னரே தடுக்க வேண்டும் எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கேட்டுக்கொண்டார்.







