சென்னையை அடுத்த ஆவடி அருகே முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று, நலம் பெற்ற சிறுமி டானியா இன்று மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் – சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது குறித்து செய்திகள் வெளியிடபட்டன. இந்த சூழலில் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிக்கரம் நீட்டுமாறு, சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில், பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி சிறுமி டானியாவுக்கு, 8 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு முதல்கட்ட முக சீரமைப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு, செப்டம்பர் மதம் சிறுமி டானியா விடு திரும்பினார்.
இதையடுத்து, முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடவும், பேசவும், சாப்பிடவும் எளிதாக வாய் திறக்கவும் சிரமப்பட்டு வந்த சிறுமி டானியாவுக்கு கடந்த ஜனவரி 5-ம் தேதி தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் , 2-ம் கட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 11 மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் சுமார் 2 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையானது நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வீடு திரும்பிய சிறுமி டானியவை, மோரையில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் நலம் விசாரித்து படிக்கிறாயா என கேட்டதற்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் வீட்டிலேயே படிப்பதாக மகிழ்ச்சியுடன் சிறுமி தெரிவித்து இருந்தார். ஏற்கனவே சிறுமி டானியாவின் கல்வி படிப்பு மற்றும் அதற்கான செலவினை ஏற்று கொள்வதாக திமுக பிரமுகர் ஒருவர் உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் சிறுமி டானியாவை அழைத்து வந்து அருகில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டார். அப்போது சிறுமி டானியாவின் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி படிப்பிற்கு ஆகும் செலவினை முழுவதுமாக ஏற்று கொள்வதாக திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் உறுதியளித்தார்.
அதன்படி தற்போது முன்பணமாக 40,000 ரூபாய் பணம் கட்டி அதற்கான ஒப்புகை சீட்டை பெற்றோரிடம் வழங்கினார். முன்னதாக சேர்க்கையின் போது முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் சிறுமி டானியாவை நன்றாக கவனித்து கொள்ளும்படி பள்ளி நிர்வாகத்திடம் சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தினார்.
- பி.ஜேம்ஸ் லிசா










