அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் டெல்லி வரை சென்று தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொங்கல் தினத்தன்று, மாவட்ட அதிமுகவினர் தங்களின் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்து வாழ்த்து பெற்று ஒரு புகைப்படம் எடுத்து கொள்ளலாம் என கட்சி அலுவலகத்திற்கும் அவரின் வீட்டிற்கும் சென்றுள்ளனர். ஆனால் அவரின் உதவியாளர்கள் “அண்ணன் இங்கு இல்லை. தலைவரை பார்க்க சென்னை சென்றுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள்” என சொல்லியிருக்கிறார்கள். தங்களின் மாவட்ட செயலாளர் தலைவரை சந்தித்த மாதிரி ஒரு புகைப்படம் கூட சமூக வலைதளங்களில் வலம் வரவில்லையே, ஒரு வேளை அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறாரோ என கிசுகிசுக்க தொடங்கியதால், கரூர் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், அவரின் உதவியாளர்கள், தொண்டர்களில் சிலரை அழைத்து, “அண்ணனுக்கு ஒண்ணும் இல்லை. நாளைக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு வருவதால் அது தொடர்பாக டெல்லி சென்றுள்ளார்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. எப்போதும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு டெல்லில வந்தாலும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதில் கவனம் செலுத்த டெல்லி செல்வதாக கூறப்படுகிறது.
எப்படியேனும் திமுகவிலும், கொங்கு மண்டலத்திலும் பலமானவராகத் திகழும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த வழக்கில் தண்டனை பெற்று தர தன்னால் இயன்ற அனைத்து மட்டங்களிலும், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இறங்கியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜயபாஸ்கர் அடிக்கடி டெல்லி பயணம் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. கரூர் மாவட்ட அரசியலில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி இடையிலான அரசியல் யுத்தம் என்பது எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமலேயே சென்று வருகிறது. இந்த நிலையில் அது கரூர் முதல் டெல்லி வரை சென்றிருப்பது புதிய செய்தியாக கரூர் மாவட்ட அதிமுக மற்றும் திமுகவினர் மத்தியில் பேசப்படுகிறது.