அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை இல்லை எனவும், 2 நாட்களுக்கு பிறகே அறுவை சிகிச்சை தேதி உறுதி செய்யப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மருத்துவமனையின் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உடனடியாக இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனவும், அதற்காக அவருக்கு மயக்க மருந்தை தாங்குவதற்கான உடற்தகுதி உள்ளதா என்பது உள்ளிட்ட மருத்துவ சோதனைகள் நடைபெறுவதாகவும், அதனபடிப்படையில் இதய அறுவை சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹெப்பரைன் ஊசி, ஏஸ்ப்ரின் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால், அறுவை சிகிச்சைக்கு 5 நாட்களுக்கு முன்பாக இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். இந்த மருந்து மாத்திரைகள் நேற்றுடன் செந்தில் பாலாஜிக்கு நிறுத்தப்பட்டன.
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய சில வழிமுறைகள் உள்ளன. நெஞ்சு வலி ஏற்பட்டு, ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படும். அந்த பரிசோதனையில் ரத்த நாளங்களில் எங்கெல்லாம் அடைப்பு உள்ளது என்பதை கண்டறியப்படும். அதன் பின் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அடைப்பு இருந்தால் ஸ்டண்ட் கருவி பொறுத்தி சிகிச்சையளிக்கலாம். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 ரத்தநாளங்களில் பல அடைப்புகள் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளன. அதனால் ஸ்டண்ட் கருவி பல இடங்களில் பொருத்துவது உகந்ததாக இருக்காது என்பதற்காக பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதனால், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு 5 நாட்களுக்கு முன்பாக ரத்த கட்டு ஏற்படாமல் இருக்க ஹெப்பரைன் ஊசி, ஏஸ்ப்ரின் மாத்திரைகள் உள்ளிட்ட மாத்திரைகளை நிறுத்தப்பட வேண்டும். அதன் பிறகு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகே அறுவை சிகிச்சை எப்பொழுது செய்யலாம் என்ற தேதியை மருத்துவர்கள் இறுதி செய்வார்கள்.
ஆனால் செந்தில் பாலாஜிக்கு நேற்றுடன் இந்த மருந்துகள் செலுத்துவது நிறுத்தப்பட்டது. அதனால் 3 – 5நாட்களுக்கு பிறகே மருத்துவர்களின் கண்காணிப்பில் பரிசோதனை மேற்கொண்டு அதன் பிறகே அறுவை சிகிச்சைக்கு செந்தில் பாலாஜி உட்படுவார். இதனால் 2 நாட்களுக்கு பிறகே செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை தேதி உறுதி செய்யப்படும். அதுவரை மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவார். அவருக்கு தேவையான இசிஜி மற்றும் ரத்த பரிசோதனைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









