மக்களை தேடி மருத்துவம் திட்ட விவரங்களை இபிஎஸ் வேண்டுமானலும் நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டட அடிக்கல் நாட்டு விழா சென்னை அடையாறிலும், 1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா சென்னை கண்ணகி நகரிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு விளக்கக் கடிதம் வந்துள்ளது. அதற்கு, ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மறுவிளக்கம் கேட்டு கடந்த 13ம் தேதி ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து கடிதம் வந்திருக்கிறது. இதுகுறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. விரைவில் சட்ட வல்லுநர்களிடம் பேசி, மறு விளக்கம் அளிக்கப்படும். நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி எப்போது தூக்கத்தில் இருந்து விழித்தார் என்று தெரியவில்லை. காரணம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் முதல் பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்துப் பெட்டகத்தை வழங்கினார். சிட்லபாக்கத்தில் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கினார். நாமக்கலில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கினார். திருச்சியில் 1 கோடியே 1வது பயனாளிக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. இவ்வாறு புள்ளி விவரங்கள் சரியாக தரப்பட்டு வருகிறது. வேண்டுமானால் டிபிஎஸ் அலுவலகத்திற்கு நேரில் வந்து எடப்பாடி பழனிசாமி விவரங்களை பெற்று பார்த்துக் கொள்ளட்டும்” என்றார்.







