சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 4, 7, 8-ஐ சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த 16 நாட்களாக பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் பாரதி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பாரதி, ”அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப்படி 50 ரூபாய் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 30-க்குள் 200 வார்டுகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரப்படும். தூய்மைப் பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் முழுமையாக ரத்து செய்யப்படும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு புதிதாக 300 வாகனங்கள் வழங்கப்படும். அதில் முதல் கட்டமாக 160 வாகனங்கள் உடனடியாக, அக்டோபர் 10-க்குள் வழங்கப்படும். வாரத்திற்கு ஒரு கையுறையும், ஒரு நாளைக்கு 2 முகக்கவசங்களும் வழங்கப்படும். மகப்பேறு விடுப்பு, வார விடுப்பு, மாதவிடாய் விடுப்பு ஆகிய கோரிக்கைகள் அடுத்த கூட்டத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தூய்மைப் பணியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே கூட்டம் நடைபெறும். அக்டோபர் 3-ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையை எதிர்நோக்கி, தற்காலிகமாக தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி நடைபெறும். அன்று நல்ல முடிவு எட்டப்படும். உங்களுக்கு நல்ல செய்தி வரும்” என்று தெரிவித்தார்.




