காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார். இது, மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையே நோக்கி நகர்ந்து, இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் எனவும் கூறினார்.
சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், சென்னையில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.








