ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – ‘சமூக நீதித்துறை’ என பெயர் மாற்றம்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் சமூக நீதித்துறை என மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்தவ ஆதிதிராவிடர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காகச் செயல்படுகிறது. இது சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பல்வேறு இலவச நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, தங்கிப் படிக்கும் மாணவர்களுக்காகத் தனியாக அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் மாணவர்/மாணவியர் விடுதிகள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் உள்ளிட்ட பணிகளை இத்துறை மேற்கொள்கிறது.

இந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்ற பெயரை ‘சமூகநீதித் துறை’யாக மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். மேலும் அரசு ஆவணங்கள் மற்றும் கோப்புகளிலும் சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றம் செய்ய வணிக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.